உலகளாவிய கத்தோலிக்கத் திருச்சபையின் திருவழிபாட்டு முறைகளில் அதிக கவனம் செலுத்தியவரும், ஒவ்வொரு பகுதியிலும் வழங்கி வரும் வழிபாட்டு முறைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கி, அவற்றையெல்லாம் திருச்சபையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கச் செய்ய வேண்டும் என வாதிட்டவரும் புனித அம்புறோஸ் ஆவார். “நான் உரோமையில் இருக்கும்போது சனிதோறும் உபவசிக்கிறேன். ஆனால் மிலானில் இருக்கும் போது அப்படிச் செய்வதில்லை என இவர் புனித அகுஸ்தீனாரிடம் கூறியிருக்கிறார். ஏனெனில் திருச்சபையின் திருவழிபாட்டு முறையைக் குறித்து அவ்வளவு ஆழ்ந்த அறிவை அவர் கொண்டிருந்தார்.
புனித அகுஸ்தீனார், புனித ஜெரோம், புனித கிரிகோரியார் போன்ற இலத்தீன் வேதபோதகர்களில் இவர் மிகவும் முக்கியமானவர். இவர் திருச்சபையின் தலைமைப் பதவிக்குத் தேர்ந்துகொள்ளப்பட்டதே சற்று வித்தியாசமானதாக இருந்தது.
கி.பி 340 இறுதிவாக்கில் ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பத்தில் இவர் பிறந்தார். உரோமை மாநகரில் பயின்ற இவர் தமது தந்தையின் வழியாகிய அரசியலில் பிரவேசித்தார். அரசியல் வானில் ஏராளம் பதவிகளிலும் இவர் துலங்கினார். கத்தோலிக்கர்களும் ஆரியன் தப்பறை வாதிகளும் பெருமளவில் மோதிக் கொண்ட காலம் அது. ஆனால் இவ்விரு பிரிவினருக்குமே வேண்டப்பட்டவராகிய அம்புறோஸ் இவர்கள் இருவரின் நன்மதிப்பையும் நன்கு பெற்றிருந்தார்.
ஆகவே கி.பி 374-ல் இவர் மிலான் நகர ஆயராய் நியமிக்கப்பட்டார். இப்பொறுப்பை சற்றும் விரும்பாத இவர், தமது முழு ஆற்றலையும் பயன்படுத்தி அந்நியமனத்தை மறுத்தார். இறுதியில் திருச்சபையின் வற்புறுத்தலுக்குப் பணிந்து அப்பொறுப்பை உவப்புடன் ஏற்றுக்கொண்டார்.அதுவரை ஞானஸ்நானமே பெறாத இவர் ஒரு வாரத்திற்குள் ஞானஸ்நானம் பெற்று திருச்சபையில் ஆயராய் அருட்பொழிவும் அடைந்தார்.
ஆயராகத் திருநிலை பெற்ற இவர் தமது சொத்தின் பெரும்பகுதியையும் ஏழை எளியவர்களுக்காக வாரிவழங்கினார். தமது குடும்பப் பொறுப்பைத் தம் சகோதரனிடம் விட்டுவிட்டார். கிரேக்க மொழியில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்ததால் வேதாகமத்தை ஊன்றிக் கற்கத் தொடங்கினார். இவரது அறிவும் புலமையும் புனித அகுஸ்தீனாரை மனம்மாற வைத்தன. ஆரியன் தப்பறை வாதத்தை இறையியல் பார்வையிலேயே வெல்லும் வல்லமையை இவர் பெற்றிருந்தார்.
கி.பி. 385-86 காலகட்டத்தில் அரசரும் அரசரின் தாயும் மக்களில் ஒரு குழுவினரும் ஆரியன் நெறியில் இணைந்தனர். இது அவருக்கு மிகவும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஆரியன் பிரிவினருக்காக ஓர் ஆலயத்தை விட்டுக்கொடுக்கவும் அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், உயிரே கொடுத்தாலும் திருச்சபையை நான் சதிக்க மாட்டேன் எனக்கூறிய இவர் கோவில்களில் எதையும் விட்டுக் கொடுக்க முன்வரவில்லை.
இங்ஙனம் திருச்சபையின் விசுவாச உண்மைகளை மிலான் நகர மக்களுக்கு உறுதிபட எடுத்துக்கூறி ஆரியன் தப்பறைகளுக்கு அந்நகரத்தில் முடிவுகட்டினார். இவருடைய ‘மரியாவியல்’ என்ற மாதாவின் இறையியல் கோட்பாடுகள், திருத்தந்தை தமாஸ்கஸ் கிரிக்காசென், லியோ போன்ற பாப்பரசர்களுக்கு வெளிச்சம் வீசுவனவாய் இருந்தன. கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உகந்தவராகிய புனித அம்புறோஸ் கி.பி 397 ஏப்ரல் நான்காம் நாள் இவ்வுலகம் நீத்து அவ்வுலகம் எய்தினார். இவருடைய திருநாள் டிசம்பர் 7ஆம் நாள் ஆகும்.