1654 ஜூலை 21-ம் நாள் இவர் பிறந்தார். பிலிப்பைன்ஸ் நாட்டின் வினயாஸ் என்ற பட்டணமே இவரது சொந்த ஊர். இயேசு சபைக் குருக்களின் பள்ளியில் பயின்ற இவர் தமது சிறு வயதிலேயே மறைக்கல்வியிலும் ஸ்பானிஷ் மொழியிலும் தேர்ச்சி பெற்றுப் பெரும் புலவராய்த் திகழ்ந்தார். இவை தவிர ஓவியம், அபிநயம், தச்சுப்பணி, பாட்டு போன்றவற்றிலும் இவர் சிறந்து விளங்கினார். இளமையிலேயே வேதபோதகத்தில் ஆழங்கால் பதித்த இவர் தமது 14 -ஆம் வயதில் இயேசு சபை குருக்களின் உதவியாளராக மாறினார். அங்ஙனம் இவர் ‘திருடர்களின் தீவு’ க்கு அனுப்பி வைக்கப்பட்டார். இத்தீவுகள் பிற்காலத்தில் மரியானா தீவுகள் எனப்பெயர் மாற்றம் பெற்று மாதாவின் மகிமைக்காக அர்ப்பணிக்கப்பட்டன. காடுகளும் மலைகளும் நிறைந்த அத்தீவினில் மறைபோதனை செய்வதென்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. கூடவே சுழற்றியடிக்கும் புயற்காற்றும் அவ்வப்போது அத்தீவினைப் புரட்டியெடுத்திருந்தது. இருப்பினும் மதப்பரப்புரையாளர்களையோ பெத்ரோவையோ அப்புயற் காற்றினால் ஒன்றும் செய்துவிடமுடியவில்லை. அவர்களின் விசுவாச தீபத்தை அணைக்கவும் முடியவில்லை. மாறாக கிறிஸ்துவின் அசைக்க முடியாத அன்பினால் அவர்கள் அனுதினம் பற்றி எரியலாயினர். அத்தீவிலுள்ள பலரையும் மனந்திருப்பி ஞானஸ்நானம் அளித்துவந்தனர்.
மனிலாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சோக்கோ என்னும் குற்றவாளி ஒருவன் இருந்தான். அவன் மதபோதகர்கள் பயன்படுத்தும் திருமுழுக்குத் தண்ணீரில் நஞ்சு கலந்திருப்பதாகப் பொய்ப் பரப்புரை செய்தான். இதனைக் ‘குவாம்’ பிரதேச மக்கள் உண்மை என்றே நம்பினர். நோய்வாய்ப்பட்டிருந்த சில குழந்தைகள் ஞானஸ்நானம் பெற்றவுடன் இறந்துபோன சில நிகழ்வுகள் இப்பரப்புரைக்கு மேலும் வலு சேர்த்தன. மதபோதகர்கள் மீது ஏற்கெனவே முன்விரோதம் வைத்திருந்த சில மருத்துவர்களும் வாலிபர்களும் இணைந்து குழந்தைகளின் மரணத்திற்குப் பொறுப்பேற்குமாறு மதபோதகர்களைக் கட்டாயப்படுத்தினர்.
இந்நிலையில், 1672 ஏப்பிரல் 2-ம் நாள் பெத்ரோவும் தந்தை விற்றோறஸ் அவர்களுமாக ‘டுமோண்’ என்ற கிராமத்தை அடைகின்றனர். தங்களுடைய ஒரு உடனூழியரைத் தேடித்தான் அவர்கள் அங்கு வந்தனர். அக்கிராமத்தின் தலைவனாகிய மாதாப்பாங் என்பவனின் மனைவி ஒரு குழந்தையைப் பெற்றாள் என்பதைக் கேள்விப்பட்ட இவர்கள், அக்குழந்தைக்குத் திருமுழுக்கு வழங்குவதற்காக அங்கே செல்லத் தலைப்பட்ட னர். ஆனால் மாதாப்பாங் தனது பிள்ளைக்குத் திருமுழுக்குத் தருவதை சற்றும் விரும்பவில்லை. எனவே அவன் அதனை வீறுடன் எதிர்த்தான். அவனது எதிர்ப்பு மனப்பான்மை சற்று ஆறும் பொருட்டு அவர்கள் அவ்விடத்தைவிட்டு தற்காலிகமாக வெளியேறி வேறோர் இடத்திற்குச் சென்றனர். அங்கே கத்தோலிக்க மறையின் விசுவாசக் கோட்பாடுகளை அவர்கள் வலிமையுடன் எடுத்தோதினர். தங்களுடன் வந்துசேரும்படி அவர்கள் மாதாப்பாங்கையும் அன்புடன் அழைத்தனர். ஆனால் கடவுளோடு தனக்குத் தீராத கோபமென்றும், கத்தோலிக்க நம்பிக்கைகள் தனக்குத் தேவையில்லையென்றும் அவன் அலறத் தொடங்கினான். மதபோதகர்களைக் கொல்லும்பொருட்டு பிறவினத்தவனாகிய இராஓ என்னும் ஒருவனை மாதாப்பாங்க் ஏற்பாடும் செய்தான். ஆனால் இக்கொலைப் பாதகங்களை அரங்கேற்றத் தயக்கம் காட்டிய இராஓ பின்னர் அதை ஒப்புக்கொண்டான். மனிதனின் பலவீனங்களே பிசாசின் நுழைவாசல்!
மாதாப்பாங்கின் மனைவி ஒரு கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவள். அவளுடைய வேண்டுகோளுக்கு ஏற்ப மாதாப்பாங்க் இல்லாத நேரம் பார்த்து அவளது குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட மாதாப்பாங்கின் கோபம் மடைதிறந்த வெள்ளம் போல் ஆயிற்று. அவனது கோபத்தின் உக்கிரத்தால் அவன் பெத்ரோவைத் தன் ஈட்டிக்கு இரையாக்கிவிட்டான். ஆனால் உடல் வலிமையும் இளமையும் உடைய பெத்ரோவினால் மாதாப்பாங்கைத் திருப்பித் தாக்கியிருக்க முடியும். எனினும் அவர் அதனைச் செய்யவில்லை எனக் கண்டோர் சான்று பகர்கின்றனர். ஏனெனில் குருவாகிய விற்றோறஸைத் தனித்தாக்கித் தாம் மட்டும் தப்பிக்க அவர் விரும்பவில்லை. ஆயுதத் தாக்குதலை விற்றோறஸும் ஏற்கெனவே விலக்கியிருந்தபடியால் அவரும் அதைச் செய்யவில்லை.
பெத்ரோவின் இதயத்தை ஊடுருவக் குத்திய ஈட்டியால் அவர் நிலை தடுமாறித் தரையில் விழுந்தார். அப்போது கடாரியால் தலையைத் தாக்கிய இராஓ, பெத்ரோவின் மரணத்தை வேகப்படுத்தினான். எனினும் அவரது உயிர் பிரிவதற்கு முன் தந்தை விற்றோறஸ் அவரது பாவங்களுக்குப் பாவமன்னிப்பு வழங்கி அவரை ஆசீர்வதித்தார். பின்னர் மாதாப்பாங்க் தந்தை விற்றோறசையும் கொன்றுவிட்டான். இதனாலும் வெறி அடங்காத மாதாப்பாங்க், தந்தை விற்றோறஸ் அணிந்திருந்த சிலுவையைக் கழற்றி அதை ஒரு கல்லால் உடைத்து வீசினான். பின்னர் இருவரது பூதவுடல்களையும், கல்லைக் கட்டிக் கடலில் தள்ளினான். ஆயினும் தமது இன்னுயிர் நீத்து இறையடி சேர்ந்த பெத்ரோ கலும்ஸோடு பலரது மீட்புக்குக் காரணமானார். இதயநோயி னால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தீர்ப்பெழுதிய ஒரு பெண் கலும்ஸோடின் பரிந்துரையினால் வாழ்வுக்குத் திரும்பி வந்தாள். துளையுண்ட இதயத்துடன் இறைவனின் அருகே இருக்கும் பெத்ரோ அப்பெண்ணுக்குப் புதியதோர் இதயத்தை நல்கி ஆசீர்வதித்தார்.
கி.பி. 2003 -ஆம் ஆண்டில் நடைபெற்ற இவ்வற்புதம் உறுதிசெய்யப் பட்டதும் 2012 அக்டோபர் 21 ஆம் நாள் பாப்பரசர் 16 -வது பெனடிக்ட் இவரைப் புனிதரென்றுப் பிரகடனம் செய்தார்.
இரஞ்சித் லாரன்ஸ்