வாணி ஓர் ஆரம்பப் பள்ளி மாணவி. அவள் தினமும் படுக்கச் செல்லுமுன் டைரி எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தாள். “ஆன் பிராங்கின் டைரிக் குறிப்புகள்” என்னும் ஒரு நூலைப் படித்ததால் ஏற்பட்ட ஒரு நல்ல பழக்கம் இது. அந்த நாள் இரவிலும் அவள் தன் டைரியைத் திறந்து பின்வருமாறு எழுதினாள்.
இன்று காலங்காத்தாலை தோழியர்களுடன் கொல்லையில் நடக்கச் சென்றேன். அப்போது ஒரு செங்கவரிக்கை மாவின் நீண்ட கொம்பு மறிந்து தரையில் கிடப்பதைக் கண்டேன். நேற்றிரவில் பெய்த மழையும் அடித்த காற்றுமே இதற்குக் காரணம் என உணர்ந்தேன். நேற்றுவரை மரத்தோடு ஒட்டிக்கொண்டு ஒய்யாரமாய் அசைந்தாடிக் கொண்டிருந்த உச்சாணிக் கொம்பு இப்படி ஒடிந்து கிடக்கிறதே என எண்ணி வருந்தினேன்.
சோமாண்ணன் வலை கட்டிய தோட்டையுடன் (வாங்கு) வந்து எட்டிப் பறித்தால் மட்டுமே கிட்டக்கூடிய மாங்கனிகள் இன்று வெறுந்தரையிலே விழுந்து சிதறிக்கிடந்தன. நாங்கள் அவற்றை ஆசையுடன் எடுத்து வாயில் வைத்து சப்பிச் சாப்பிட்டோம். அதன் சுவை இப்போதும் வாயில் சப்புக்கொட்டுகிறது. ஆனால் அந்த மரக்கொம்பு மட்டும் கேட்பாரற்றுக் கீழே கிடந்து வெதும்புகிறது! எதற்கும், ரொம்ப உயரத்தில் நிற்காமல் இருப்பதே சிறந்தது எனத் தோன்றுகிறது.
அக்கொம்பு முறிந்து கிடக்கிற இடத்தில் நிறைய புற்பூண்டுகள் உள்ளன. அவை எதுவும் காற்றுக்கோ மழைக்கோ அசந்துகொடுக்கவும் இல்லை. காலையில் பனித்துளியால் நனைந்து சற்றே தலைவணங்கி நின்றன. ஆனால் மத்தியான வாக்கில் அவை பீடுடன் தலைநிமிர்ந்து நின்றன. எனவே புல்லாவதே நல்லது என்று எனக்குத் தோன்றிற்று. அப்போது உயரத்திலிருந்து விழுவதால் ஏற்படும் வலிகளிலிருந்தும் தப்பிக்க முடியும்!
ஆகவே, நான் என் இயேசுவிடம், “ஆண்டவரே, கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் மரமாக நான் மாறவேண்டாம். ஆனால், புல்லாகிப் பூடாகிச் சிறு புதராகி இம்மண்ணில் இருந்தாலே போதும்” என வேண்டிக்கொண்டேன்.
வாணி, டைரியை எழுதி முடித்து மூடி வைக்குகையில், அவளது அப்பாவும் அம்மாவும் அங்கே அவளறைக்கு வந்தனர்.
அவளுடைய தம்பி தங்கையர் ஏற்கனவே உறங்கி விட்ட காரணத்தால் அம்மாவுக்கு உம்மா (முத்தம்) கொடுக்க அவர்களால் முடியவில்லை. அவளுடைய உம்மாவை வாங்கிக் கொண்ட அம்மா வாணியை அணைத்து உச்சிமோந்தாள். “மகளே நீ ரொம்ப சமர்த்து. இன்னும் ஏராளம் நல்ல புத்தகங்கள் வாசிக்கணும். அப்பத்தான் ரொம்ப நன்னா எழுதவரும்” என்றாள்.
“கட்டாயம் செய்கிறேன் அம்மா. என் புத்தகங்களை வாசிச்சு ஏராளம் பேர் இயேசுசுவாமியைக் கையெடுத்துக் கும்பிடணும். அதுதான் எனக்கு ரொம்ப ஆசை. இயேசுவுக்கும் ரொம்பப் புடிக்கும்”. அவர்கள் மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்றனர்.