அது விறுவிறுப்பான ஓட்டப் பந்தயத்தின் இறுதி நிமிடங்களாக இருந்தது. மைதானத்தில் திரண்டிருந்த அனைவரது கண்களும் கென்யா நாட்டு எய்பல் முத்தாயி என்ற வீரரிடம் தான் இருந்தன. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற அவனது வெற்றிவாய்ப்பு ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டிருந்தது. ஏனெனில் இனியும் அவர் கடக்க வேண்டிய தூரம் வெறும் பத்து மீட்டர் மட்டுமே.
திடீரென்று அவர் தடம் மாறுகிறார். ஓட்டத்தையும் நிறுத்துகிறார். அவர் தமது தூரத்தைக் கடந்து முதலிடத்தைப் பெற்றதாக நினைத்துவிடுகிறார். ஆனால் தூரம் இனியும் இருக்கிறது. அவருக்குத் தொட்டுப் பின்னால் ஓடிவந்து கொண்டிருக்கிறார் ஸ்பெயின் நாட்டு வீரர் இவான் பெர்ணான்டஸ் அனாயா. பரிசைத் தட்டிச் செல்ல அவருக்கு இது பொன்னான நேரம். ஆனால் நடந்தது வேறு. அனாயா அவரருகிலே சென்று சைகை காட்டி அவரை மறுபடியும் தடத்திற்குள் கொண்டு வருகிறார்.
தகாத பரிசைத் தவிர்க்கவும் போட்டியில் எதிரிக்குக்கூட உகந்ததை அளிக்கவும் அனாயா காட்டிய நன்மனம் எவ்வளவோ பெரிய முன்மாதிரி. இப்படிப்பட்ட நல்ல வாய்ப்புகள் நன்மை செய்வதற்காக நமக்கும் கிடைத்திருக்கின்றனவே…!
“சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக் கொள்வர். பொதுநலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்” (நீமொ. 12:20).