அந்தக் காலைப் பொழுதில் நான் நித்திய ஆராதனைக் கோவிலில் இருந்தேன். மனசு பாரத்தால் வலித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளே பாரமுற்ற மனசுக்குக் காரணம். வெளியே தீராத மழை. உள்ளேயோ கலக்கமுற்ற உள்ளம்..! அதற்கிடையில் குருவிகளின் இனிய ஓசை. அப்போது உள்ளுக்குள் அருளின் ஒரு மின்மினி வெளிச்சம்.
மரங்கள் ஆடவில்லை. இலைகளும் அசையவில்லை. எல்லாமே விறைத்து நிற்கின்றன. குருவிகளின் மெல்லிய இறகுகள் மழைத்துளியால் சில்லிட்டு நிற்கின்றன. அன்றைய உணவுக்கு உத்திரவாதமில்லை. வேடர்களின் கண்ணிகளைப் பற்றியும் தெளிவில்லை. இருந்தும் அவை பாடுகின்றன. என் நெஞ்சும் சற்றே லேசானது. திடீரென்று விவிலியம் திறந்தேன்.
கிடைத்ததோ யூதித்து பாடிய புகழ்ப்பா (யூதி. 16). நேற்றும் இதுதானே கிடைத்தது என இறுக மூடினேன். மீண்டும் ஜெபித்துக்கொண்டே திறந்தேன்: ஒரு எச்சரிக்கையைக் கண்டேன். “கடவுளின் அருளை மறக்காதே”.
“என் உள்ளம் கசந்தது. என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின. அப்பொழுது நான் அறிவிழந்த மதிகேடன் ஆனேன். உமது முன்னிலையில் ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன். ஆனாலும் நான் எப்போதும் உமது முன்னிலையில் தான் இருக்கிறேன். என் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்துள்ளீர். உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர்” (தி.பா. 73:21-24).
- சிஸ்டர் ஜீனாமேரி எம்.எஸ்.எம்.ஐ.