மாறக்கானாவில் நடந்த ஆனந்த நடனம்! – Shalom Times Shalom Times |
Welcome to Shalom Times

மாறக்கானாவில் நடந்த ஆனந்த நடனம்!

படுதோல்வி என்று எல்லாரும் சொன்னாலும் வெற்றிப்படியைத் தாண்டிச் சென்று ஆனந்த நடனம் செய்ய முடியும். சோர்ந்து போய் இருக்கிறவர்களைத் திடப்படுத்த வேண்டிய கடமை உனக்கு உண்டு.

மாறக்கானாவைக் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது கால்பந்தாட்ட வீரர்களின் சொர்க்கபுரி. பல அணிகள் சாதனை படைக்கக் காரணமாக இருந்ததும், பலரது வேதனைகள் அரங்கப் பிரவேசம் செய்வதற்கு வழிவகுத்ததுமான ஒரு பிரசித்தி பெற்ற ஆடுகளமே இது. 1950 ஜூலை 16-ஆம் நாள் உலகமே விழி உயர்த்தி நோக்கிய உலகக் கால்பந்தின் இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது.

கால்பந்தின் வீரசூரனாகிய பிரேசிலும் கற்றுக்குட்டியாகிய உறுகுவே என்ற சிறுதேசமும் நேருக்கு நேர் களத்தில் நிற்கின்றன. இன்னும் சரியாகச் சொன்னால் தாவீதும் கோலியாத்தும் முட்டிமோதும் ஆட்டக்களம். ஆட்டம் தொடங்குமுன்பே ரசிகர்கள் எழுதிக்குறித்தார்கள், பிரேசில் வெற்றிக்கனியை எளிதாகத் தட்டிச் செல்லுமென்று. ஏன் உறுகுவே அணியின் அதிகாரிகள்கூட அப்படித்தான் நம்பினார்கள். அவர்களின் விளம்பரதூதர் கூட, ‘நீங்கள் தோற்பது உறுதி; ஆனால் அத்தோல்வி ஒரு கூறுகெட்ட தோல்வியாய் மாறிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றுதான் உபதேசம் செய்திருந்தார். அவர்களின் அணிப்பயிற்சியாளர் கூறியது: “இந்த ஒருமுறையும் எதிர்த்து நிற்க முயற்சி செய்யுங்கள்.” இப்படி, ஊக்கப்படுத்த வேண்டியவர்களே மனந்தளரும் வகையில் பேசி அவ்வணியின் வீரர்களை வாடிப்போகச் செய்தார்கள்.

ஆனந்த நடனம்

ஆனால் உறுகுவேயின் கேப்டன் சற்று வேறுபட்டவர். அவரது பெயர் வரேலா. காரிருள் மண்டும் அடர் இருட்டில் விண்மீன்களைக் காணும் கண்களை உடையவர். அடித்துச் செல்லும் ஆற்றுவெள்ளத்திலும் தீவுகளைத் தேடும் திறன் மிக்கவர். அப்படிப்பட்டவர்தான் வரேலா. அவர் தமது அணியின் வீரர்களை அருகே வரவழைத்து, ‘மக்களே இது நமக்கு வெறுமொரு போராட்டம் அல்ல; மாறாக இது ஜீவமரணப் போராட்டம். நமக்குமுன் நான் காணும் ஒரே சாத்தியக்கூறு வெற்றி மட்டுமே. அதுவே நமது ஒரே இலட்சியம். அதற்காக நாம் துணிந்து களமிறங்குகிறோம்’ என்றார்.

அவரது துணிவூட்டும் சொற்கள் வீரர்களின் நெஞ்சில் அனல் பற்ற வைத்தது. அவர்கள் பாயும் புலிகளைப் போல் ஆட்டக்களம் நோக்கிச் சீறிப்பாய்ந்தனர். ஆட்டத்தின் தொடக்கம் பின்வாங்கும்படிதான் இருந்தது. பிரேசில் குதித்து எம்பியது. 47-வது நிமிடத்தில் பிரேசில் பிரியாக்கா என்னும் வீரர் மூலமாய் முதல் கோளை சொந்தமாக்கியது. அரங்கமே அதிர்ந்தது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளம் இரைந்தது: பிரேசில்… பிரேசில் என்று!

பேரிரைச்சலின் ஆரவார சத்தங்கள் உறுகுவேயின் உள்ளத்தைச் சற்றே தளர்த்தின. ஆயினும் இடைவேளையின் இடையில் வரேலா அவர்களைத் தட்டிக்கொடுத்தார்: உறுமும் ஓசைகளால் உடைந்து போகாதீர்கள், இனி நாம் ஒரு புதிய உத்தியைக் கையாளப் போகிறோம். சற்று நேரத்திற்கு பந்து நம் காலடியில் தான் நிற்க வேண்டும். ஆகவே மெல்லத்தட்டி உருட்டுங்கள். இது கைமேல் பலனைக் கொண்டுவந்தது. உறுகுவே வீரர் ஷியாஃபினோ இதற்குள் ஒரு கோள் அடித்தார். இப்போது சமநிலை. உறுகுவே வீரர்களுக்கு உற்சாகம் துளும்பியது. அவர்கள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். உண்மையில் அன்று புள்ளிவிபரம் பார்த்தால் கோப்பையை பிரேசில்தான் வென்றிருக்கும். ஆனால், அவர்கள்கூட எதிர்பார்க்காத ஒன்று நடந்தது!

ஆட்டம் தீர இனி பதினோரு நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் உறுகுவே இன்னொரு கோளும் அடித்தது. இந்த கோளை அடித்தவர் அல்சிடஸ் கிகியா என்பவர். பிரேசில் அணிக்குச் செய்வதென்ன எனத்தெரியவில்லை. அவர்களும் வீறுகொண்டு எழுந்தனர். ஆனால் உறுகுவேயின் தடுப்பாட்டம் அவர்களைக் கதிகலங்க வைத்தது. இறுதியில் உறுகுவே உலகக் கோப்பையை தட்டிச்சென்றது. அவர்களின் ஆனந்த நடனத்தை அரங்கதிரக் கண்ட கால்பந்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் விழிவிரித்தனர்.

வெற்றிப்பாதை

உறுகுவேயின் ஆச்சரியமான வெற்றி நமக்கு ஏராளம் பாடங்களைக் கற்றுத்தரவில்லையா? பாதக சூழல்களைக் கண்டு பதறுவதால் வெற்றியின் இலக்கை நாம் எப்போதும் எட்ட முடியாது. கீழ்நோக்கி நடந்தால் நம் நிழல் மட்டும்தான் தென்படும். அது மீண்டும் நம் உள்ளத்தைத் தளர்த்திவிடும். எனவே முதலில் நாம் நமது குறைபாடுகளை எட்டத்தில் வைத்துவிட வேண்டும்.

நீ உன் தலையை உயர்த்தி நோக்கினால் நீதியின் கதிரவனாகிய கடவுளைக் காண முடியும். அவ்வொளி உன்னை ஒளிர்விக்கும். ‘மகனே அஞ்சாதே; நான் உன்னோடு இருக்கிறேன்’ என்னும் அவரது ஆனந்தக் குரலை நீ கேட்கக்கூடும். மகத்தான காரியங்களை எளிதாகச் செய்யும் ஆற்றலை அது உனக்கு நல்கும். தாவீதாகிய உன்னை அது வலுப்படுத்தும். உனக்கு முன்னால் பலவகையான கோட்டைச் சுவர்கள் விண்ணை முட்டி நிற்கின்றன. அச்சுவர்களைத் தாண்டிக் கடக்கும் வலிமையை அவர் உனக்கு அருள்வார். ‘என் கடவுளின் அருளால் எம்மதிலையும் நான் தாண்டுவேன்’ என்னும் திருப்பாடல் வரிகளை மனத்தில் எண்ணிப்பார்.

கடவுள் கூடவே இருக்கிறார் என்ற உண்மையை உணரும் ஒருவர் கொள்ளும் மனத்திடனுக்கு அளவே இல்லை. “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலி. 4:13). இவ்வசனத்தை பல உரு ஆவர்த்தனம் செய்து உள்ளத்தில் பதித்துக் கொள்ளுங்கள்.

நீ தேர்வுக்கு ஆயத்தமாகும் ஒரு மாணவனா? அப்படியானால் அது உன்னைத் தேர்வு பயத்திலிருந்து காப்பாற்றும். எந்த சிக்கலிலாவது மாட்டிக்கொண்டு விழிக்கிறாயா? அப்படியானால் இவ்வசனத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். அப்போது கடவுளின் அளப்பரிய வல்லமையை நீ காண்பாய். ‘வாக்கு கடவுளாக இருந்தார்’ என்ற இறைவார்த்தையையும் மறக்காதே. அதனால் எந்தப் பிரதிகூலச் சூழலையும் அரிதின் முயன்று கடந்து செல்ல வேண்டியவனே நீ என்பதை ஒருபோதும் மறவாதே. உறுகுவே அணி உனக்குப் புகட்டும் முதற்பாடம் இதுவே.

எழுந்து ஒளிவீசு

நம் ஆற்றலை அரித்துத் தின்பது நம்மோடிருப்பவர்களின் நம்பிக்கையற்ற பேச்சுகள்தான். உறுகுவே வீரர்களின் அதிகாரிகள் அவர்களை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாகத் தளர வைக்கும் வார்த்தைகளையே பேசினர். ‘அதைச் செய்யும் ஆற்றல் உனக்கு எங்கே இருக்கிறது?’ எனக்கூறி பலரும் உனக்குச் செயற்கையான வேலிகட்டப் பார்ப்பார்கள். அல்லது ‘உதவாக்கரை’ என்று வசவு பேசுவார்கள். உருப்படமாட்டாய் என சபிக்கவும் தயங்கமாட்டார்கள். ஆனால் பிறரது வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைக் காதுகொடுத்துக் கேட்காதே.

உன்னுடைய உண்மையான தகப்பன் கடவுளே. அவர் கூறுகிறார்: “எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.” (எசா. 60:1). மனம் சோர்ந்த எவருடனும் ஆண்டவர் இவ்வார்த்தைகளைச் சொல்லித் தேற்றுகின்றார். கடவுள் உனக்குள்ளே வைத்துள்ள திறமைகளையும் சாத்தியக்கூறுகளையும் குறித்து யோசித்துப்பார். அவற்றை முழுமையாக வெளியே கொண்டுவா.

அங்ஙனம் செய்வது உனக்காக மட்டுமல்ல; பிறருக்காகவும்தான். சோர்ந்து போய் இருக்கிறவர்களைத் திடப்படுத்த வேண்டிய கடமை உனக்கு உண்டு. அதனால்தான் ‘எழுந்து ஒளிவீசு’ என்று சொல்லப்பட்டுள்ளது. உறுகுவே அணியின் கேப்டன் இதைத்தானே செய்தார். அவர் தமது திறமைகளை உய்த்தறிந்தார். எனவே பிறரை உசுப்பும்படி எழுந்தார்.

சோர்ந்து போனவர்களைத் திடப்படுத்தி தளர்ந்து போனவர்களை பலப்படுத்துகின்ற கடவுளின் கையில் நீயும் ஓர் உபகரணமாக மாறவேண்டும். அங்ஙனம் உனக்கு அடுத்திருப்பவர்களைத் திடப்படுத்த ஆயத்தமாகு. உன் மக்களை, நண்பர்களை, அக்கம்பக்கத்தவரை, மாணவமணிகளை, உடன் ஊழியர்களையெல்லாம் நீ கொண்ட அதே வெளிச்சத்திற்குக் கூட்டிவர வேண்டும். அப்போது கடவுள் உன்பால் அகமகிழ்ந்து தமது தாராள நன்மைகளால் உன்னை நிரப்புவார். அத்தகைய ஒரு வாழ்க்கை உனக்குக் கிடைக்கும்படி ஜெபிப்போமா?

ஒளியில் வாழும் இயேசுவே, உம்மை நான் ஆராதிக்கிறேன். என் உள்ளத்தின் இருளார்ந்த பகுதிகளுக்குள் நீர் உமது ஒளியின் கதிர்களை அனுப்பும். என் உள்ளத்தை தேவரீர் ஒளிரும்படிச் செய்யும். என்னைச் சுற்றிலும் வாழ்பவர்களையும் உம்மை அணுகிவருமாறு செய்ய நீர் என்னை ஒரு கருவியாக மாற்றும். தூய அன்னையே, புனித சூசையப்பரே ஆண்டவருடைய முகவொளியில் நான் என்றும் வாழ நீங்கள் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஆமேன்.

  • கே. ஜே. மாத்யூ