“திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை” (யோவா. 10 : 10).
ஆன்மாக்களைத் திருடிச் செல்லும் சாத்தான் அவற்றைக் கொன்று அழிக்கவே முயல்கிறான். இதற்கான முதற்படியே திருடுதல். நம்முடைய வீட்டு அலமாரியில் வைத்திருக்கும் தங்கச் சங்கிலியைத் திருடிச் செல்லும் ஒருவன் அதை எங்கே வைப்பான்? அவன் அதனைத் தனது வீட்டு அலமாரிக்குள் கொண்டுபோய் அடைத்து வைப்பான். பிறகு வசதிபோல் அதை விற்கவோ, உருக்கி பிறிதொன்றாகச் செய்யவோ முயல்வான். தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டால் அவன் அதைக் கொண்டுபோய்க் கடலிலோ வாய்க்கால்களிலோ எறிந்து விடுவான்.
ஆகையால் திருட்டின் முதற்படி என்பது, கவர்ந்த பொருளை அதன் உரிமையாளரின் பார்வையிலிருந்து மறைப்பதுதான். பிறகு அதைத் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து வைப்பது, விருப்பம்போல் அதைப் பயன்படுத்துவது.
நமது ஆன்மாவின் உரிமையாளராகிய கடவுள் நமது ஆன்மாவைச் சில இடங்களில் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கிறார். குடும்பம், பங்கு, சபை, துறவற சமூகம் இன்னபிற இடங்களில் அவர் நம் ஆன்மாக்களைப் பேணி வைக்கிறார். ஆனால் நம்மை அழிக்க நினைக்கும் சாத்தான் முதலில் நாம் இருக்கும் இடத்திலிருந்து நம்மை அகற்றி விடுவான். குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படும்போதும், பங்கு சமூகத்துடன் உரசும்போதும், துறவற இல்லங்களிலிருந்து மனத்தளவில் அகலும்போதும் கடவுள் நமக்காக ஏற்பாடு செய்துள்ள அமைப்புகளை அவமதிக்கும்போதும் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள் – நாம் ஆபத்தான வழியில் நடக்கிறோம்.
நம்மைக் குறித்தான கடவுளின் திட்டத்திற்கு ஒவ்வாத வழிகளை நாமே வலிய போய்த் தேர்ந்தெடுத்தால் நாம் கடவுளின் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வெளியே வந்துவிட்டோம் என்று பொருள். திருடனிடம் அகப்பட்ட ஒரு பொருள் எப்போது வேண்டுமானாலும் அழிக்கப்படலாம். கடவுளின் அலமாரியில் இருந்து அலகையின் அலமாரிக்கு இடம்பெயர்ந்த பொன் நகைகளுக்கு என்ன நேருமோ அதுவே நமக்கும் நடக்கும். ஆதலால் கடவுள் நம்மை எங்கு வைத்திருக்க விரும்புகிறாரோ அங்கே நிலைத்திருக்கப் பாருங்கள்.
‘இறை மனித அன்புக் கீதை’யில் யூதாசின் அழிவுக்குக் காரணமான ஒரு பின்னணி விளக்கப்பட்டுள்ளது. திருத்தூதர்களின் சங்கத்தைவிட்டு யூதாஸ் அவ்வப்போது அகன்று போவது வழக்கம். ஒவ்வொரு தடவை அகலும்போதும் அதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்வதும் உண்டு. இயேசுவால் உருவாக்கப்பட்ட சீடர்க்குழுவை விட்டுவிலகி நகர சந்திப்புகளில் தன் நண்பர் குழுவுடன் நேரம் செலவிடுவதையே அவன் பெரிதும் விரும்பினான். இறுதியில் சாத்தானின் கொத்தடிமையாக மாறினான். ஆன்மாவை அழித்துக் கொள்ளவும் தலைப்பட்டான்.
நாம் எங்கே பாதுகாக்கப்பட வேண்டுமென்பதை நாம் அல்ல; நமது உரிமையாளர்தான் தீர்மானிக்க வேண்டும். கடவுள் நம்மை எங்கே வைத்திருக்கிறாரோ அங்கே உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். ஒருவேளை நாம் அங்கே புறக்கணிக்கப்படலாம் அல்லது அவமதிக்கப்படலாம். அச்சுறுத்தலுக்குக்கூட ஆளாக நேரிடலாம். இருந்தாலும் தற்காலிகமான சில லாபங்களுக்காக நாம் வேறிடங்களை நாடிச் செல்லக்கூடாது. அப்படிச் சென்றால் சாத்தானின் கண்ணிகளில் சிக்க நேரிடும்.
நாம் இப்போது எங்கிருக்கிறோம். கடவுளின் அலமாரியிலா? இல்லை, அலகையின் அலமாரியிலா? நாம் இழந்துபோன நாணயமா? இல்லை, காணாமற்போன ஆடா? பன்றிக்கூட்டில் கிடக்கும் ஊதாரி மைந்தனைப்போல் மாறத்தான் நாம் நினைக்கிறோமா? கருணைக் கடவுள் நம்மைத் தேடி வருகிறார். அவர் நம்மைத்தான் காத்திருக்கிறார். ஆண்டவரின் அரியணை அருகே அவனியர் அனைவரும் அணுகிவருமாறு நாம் செபிப்போமா?
அன்பின் ஊற்றாகிய கடவுளே நீர் எங்களைத் தேடிவந்து மீட்டருளும். கதறி அழக்கூட முடியாத நாணயங்களும், கதறி அழ மட்டும் தெரிந்த ஆடுகளும், எல்லாவற்றையும் இழந்துவிட்ட ஊதாரி மைந்தனுமே நாங்கள். எங்களை நீர் மீட்டு உரிய இடத்தில் சேர்த்தருள வேண்டுமென்று உம்மை மனதார மன்றாடுகின்றோம். ஆமேன்.
– ஷெவலியார் பென்னி புன்னத்தறா